திருநங்கைகள் நல வாரியம் (Transgender Welfare Board Tamilandu) அறிக

திருநங்கைகள் நல வாரியம்

மூன்றாம் பாலின மக்களை தமிழகத்தில் திருனர் என்றும் குறிப்பாக திருநங்கை என மூன்றாம் பாலின பெண்களையும் திருநம்பி என மூன்றாம் பாலின ஆண்களையும் அழைக்கின்றனர். பொதுவாக திருநங்கைகள் என்று அழைக்கப்படும் அவர்கள் பிறக்கும்போதே ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும்போது உளவியல் மற்றும் நடத்தை மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள்.

திருநங்கைகள் சமூகத்திலும் குடும்பத்திலும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் ஏனெனில் பலர் தங்கள் பாலின அடையாளத்தை வெளிப்படையாக வெளிப்படுத்த தயங்குகிறார்கள் ஏனெனில் அவர்கள் பாகுபாடு, வன்முறை அல்லது வெறுப்பை சந்திக்க நேரிடும். இந்த சவால்களை எதிர்கொள்ள பல திருநங்கைகள் தங்கள் சொந்த சமூகத்தை உருவாக்கி அங்கு அவர்கள் ஆதரவையும் புரிதலையும் காணலாம். இந்த சமூகங்கள் தனிப்பட்ட வளர்ச்சி அரசியல் செயல்பாடு மற்றும் கலாச்சார வெளிப்பாட்டிற்கான இடங்களை வழங்குகின்றன.

பாதிக்கப்படக்கூடிய நபர்கள் என்பது  உடல். சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்/சமூகங்களைக் குறிக்கிறது இந்த வகையில் அதிகம் பாதிக்கப்படும் நமது மனித இனத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகள் மூன்றாம் பாலினத்தவர் என்று அழைக்கப்படும் திருநர், திருநங்கை ஆவர்.

உறுப்பினர்கள்

தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினர் நல வாரியத்தினை 15.04.2008 அன்று துவக்கி அவர்களின் குறைகளை களைந்து வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை அளிப்பதுடன் அவர்களுக்கு கல்வி உதவிகள் மற்றும் சமூக பாதுகாப்பு அளித்து மூன்றாம் பாலினருக்கு சமுதாயத்தில் உரிய அடையாளம் வழங்கியுள்ளது. தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தில் மாண்புமிகு சமூக நலத் துறை மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 11 அலுவல்சார் உறுப்பினர்களும், 12 அலுவல்சாரா (மூன்றாம் பாலினர்) உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

மூன்றாம் பாலினர் நலக்கொள்கை

மூன்றாம் பாலினர் நலக்கொள்கை என்பதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடாகும். அக்கொள்கையின்படி, மூன்றாம் பாலினர் அரசு மருத்துவமனைகளில் தங்களது பாலின மாற்று அறுவை சிகிச்சையினை இலவசமாக செய்து கொள்ளவும், இலவச வீடு, பல்வேறு குடியுரிமை ஆவணங்கள், முழு கல்வி உதவித்தொகையுடன் அரசு கல்லூரிகளில் உயர்கல்வியில் சேர்தல் மற்றும் வருமானத்தை உருவாக்கும் திட்டங்கள் போன்றவற்றை அடைவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நலத்திட்டங்கள்

மூன்றாம் பாலினர் தங்களது வாழ்வாதாரத்தை மதிப்புடனும், மரியாதைக்குரிய முறையிலும் அமைத்து கொள்ளும் வகையில் மளிகை கடைகள், சிற்றுண்டி கடைகள், துணி கடை, தேங்காய் நாறு பொருட்கள், அரிசி மற்றும் காய்கறி கடைகள் போன்ற சிறு வணிகம் துவங்குதல், ஆடு, மாடு வளர்த்தல் போன்ற தொழில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. பயணிகள் ஆட்டோ மற்றும் பொருட்கள் ஏற்றி செல்லும் ஆட்டோ ஆகியவை வாங்கவும் நிதியுதவி வழங்கப்படுகிறது. 40 வயதை கடந்த மூன்றாம் பாலினருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000/- வழங்கப்படுகிறது.

சமுதாயத்தில் மூன்றாம் பாலினர் மதிப்புடன் வாழ அரசு, முன் உதாரணமாக பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. காவல் துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் பணி, சுகாதராத் துறையில் இயன்முறை சிகிச்சையாளர் மற்றும் ஆய்வுகூட உதவியாளர் பணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணி ஆகியவற்றில் மூன்றாம் பாலினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநராக இரு மூன்றாம் பாலினர் அரசு பணியில் உள்ளனர். மேலும், எட்டு மூன்றாம் பாலினர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் பாதுகாப்பு பணியிலும் பணியமர்த்தப்பட்டுளளனர்.

விருதுகள்

“சிறந்த மூன்றாம் பாலினர் விருது” 2019ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு மூன்றாம் பாலினர் நலனில் சிறந்த சேவை செய்து, அவர்களது பணியினை தனது சொந்த முயற்சியின் மூலம் கட்டமைக்க உதவிய மூன்றாம் பாலினருக்கு ரூ.1.00 லட்சம் மற்றும் பாராட்டு சான்றுடன் இவ்விருது வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் மூன்றாம் பாலினர் நாளான ஏப்ரல் 15-ம் நாள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது

Leave a Reply