வட்டார ஊராட்சி (Block Development Office)

மாதிரி ஊராட்சி ஒன்றியம்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் சில கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாதிரி ஊராட்சி ஒன்றியம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. (தற்போது இருக்கும் வட்டரா ஊராட்சி ஒன்றியங்ககள் அமைக்கப்பட்டது) அதன் அடிப்படையில் 1952 ஆம் ஆண்டு மத்திய அரசு சமுதாய வளர்ச்சி மற்றும் தேசிய விரிவாக்கம் திட்டத்தினை துவக்கி 75000 மக்கள் தொகை என்கின்ற விகிதத்தில் வளர்ச்சி வட்டாரங்கள் கொண்டு வரப்பட்டது.

பல்வந்தராய் குழு

திரு. பல்வந்தராய் தலைமையில் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்த அறிக்கையில் மக்களாட்சி பரவலாக்கம் என்கின்ற தத்துவத்தின் அடிப்படையில் ஊராட்சி அமைப்புகளை நிறுவ பரிந்துரைத்தது.

மதராஸ் பஞ்சாயத்து சட்டம்

இந்த அறிக்கையின் படி 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மதராஸ் பஞ்சாயத்து சட்டம் மற்றும் மதராஸ் மாவட்ட வளர்ச்சி மன்ற சட்டம் கொண்டு வந்தது

ஊராட்சி ஒன்றியங்கள் (வட்டார)

1960 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த சமுதாய வளர்ச்சி வட்டாரங்களை பின்னர் வட்டார ஊராட்சி ஒன்றியங்கள் என பெயர் மாற்றப்பட்டன தமிழ்நாட்டில் 385 வட்டார ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் 75 ஆயிரம் மக்கள் தொகை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

கிராமங்களை ஒருங்கிணைத்து கிராம அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணித்து மேற்பார்வை செய்யும் அமைப்பாக வட்டார ஊராட்சி மூன்றடுக்கு ஊராட்சிகளில் இடைநிலை ஊராட்சியாக செயல்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய வார்டு அமைப்பு

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வார்டுகளாக பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் 5000 மக்கள்தொகை கொண்ட பகுதியாக மாற்றபட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்-1994படி ஊராட்சி ஒன்றிய மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொகையை எந்த விகிதாச்சாரத்தில் அமைந்துள்ளதோ அதே விகிதத்திற்கு உறுப்பினர்களும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் உள்ள இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும். மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். 

ஊராட்சி ஒன்றிய கடமைகள்

1994 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடமைகள் மற்றும் பொறுப்புகளை வழங்கியுள்ளது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட பிரிவு 112 கட்டாய கடமைகள். சட்ட பிரிவு 113,114 ஒப்பளிப்பு பணிகள். சட்ட பிரிவு 115 விருப்ப கடமைகள் போன்ற கடமைகளை முன்வைக்கிறது.

ஊராட்சி ஒன்றியத்தில் கீழ்கண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்

ஊராட்சி ஒன்றியத்திற்கு சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் கடமைகளை நிறைவேற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் ஆலோசனைகளின் அறிகுறிகளையும் பெறுவதன் மூலம் ஊராட்சி ஒன்றிய பணிகள் சிறப்பாக நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

  1. நியமனக்குழு
  2. வேளாண் உற்பத்தி குழு
  3. கல்வி குழு
  4. பொதுநோக்கு குழு
  5. அவ்வப்போது அரசின் உத்தரவின் பேரில் அமைக்கப்படும் இதர குழுக்கள் போன்றவை

அரசு பிறப்பிக்கும் விதிகளுக்கு உட்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இந்த குழுக்கள் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

Leave a Reply