கிராம ஊராட்சி Village Panchayat
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது!
கிராமம் உயர்ந்தால் நாடு முன்னேறும் !
நாட்டின் முதுகெலும்பு கிராமங்களே!
காந்தியடிகள் (தேச தந்தை)
மன்னர் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள்
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மன்னர் ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.சோழப் பேரரசின் பராந்தக சோழன் (கி.பி. 907-955) ஆட்சி செய்தான். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இவரது ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.மன்னராட்சியின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயக முறையில் செயல்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகளை இந்தக் கல்வெட்டில் காணலாம்.
கிராம உள்ளாட்சி நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுக்க குட ஓலை முறையில் தேர்வு செய்யப்பட்டனர் என கல்வெட்டுகள் ஆதாரம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.11ஆம் நூற்றாண்டு வரை குறிப்பாக சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சிகள் உள்ளூர் சுயாட்சி மூலம் இயங்கி வந்தன என்பதை காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியலாம். கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பராந்தக சோழர் காலத்தில் கிராமசபை நடைபெற்ற விவரம் குறித்த ஆதாரங்களும் அங்கு கிராமஊராட்சி நிர்வாகிகளை நிர்வாகம் செய்ய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படும் முறைகளில் தேர்தல் விதிமுறைகளை குறித்து கோவில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள்
- மன்னராட்சிக்கு பின்னர் இஸ்லாமியர்கள் ஆட்சி முறையும், ஆங்கிலேயர் ஆட்சி முறையும் உள்ளூர் அரசமைப்பு நலிவுற்று போனது. எனினும் ஆங்கிலேயர் தங்களுக்கு ஏற்றவாறு உள்ளாட்சி அமைப்பு முறையை மாற்றம் கொண்டு வந்தனர்.
- 1854 ஆம் ஆண்டு மாவட்ட போர்டு நிதி ஏற்படுத்தப்பட்டது.
- 1871 ஆம் ஆண்டு ஆளுநர் மேயோ என்பவரால் மெட்ராஸ் உள்ளாட்சி நிதி சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 1882 ஆம் ஆண்டு ரிப்பன் பிரபுவால் உள்ளூர் அரசமைப்பு தீர்மானத்தின் வெளிப்பாடாக 1884 ஆம் ஆண்டு மெட்ராஸ் லோக்கல் போர்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 1920-ஆம் ஆண்டு மதராஸ் லோக்கல் போர்ட் சட்டம் கிராம ஊராட்சிகள் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களை ஆங்கிலே அரசு கொண்டு வந்தது.
- சென்னை கிராம ஊராட்சிகள் சட்டம் சென்னை லோக்கல் போர்டு சட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளும் 1930 இல் கொண்டுவரப்பட்டன.
- 1950-ஆம் ஆண்டு சென்னை கிராம ஊராட்சிகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.
- 1951-ஆம் ஆண்டு பரிசோதனை முறையில் சில கிராம ஊராட்சியில் பகுதியில் ஒன்று சேர்த்து மாதிரி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் என்ற அமைப்பு மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டது.
- 1952-ஆம் ஆண்டு மத்திய அரசு சமுதாய வளர்ச்சி மற்றும் தேசிய விரிவாக்கத் திட்டம் ஒரு வட்டத்திற்கு 75 ஆயிரம் மக்கள் தொகை விதம் வட்டார வளர்ச்சி வட்டாரங்கள் கொண்டுவரப்பட்டது.
- 1957-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மக்களாட்சியின் பரவலாக்கம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்த திரு. பல்வந்தராய் மேத்தா அவர்கள் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது அதன்படி 1958 ஆம் ஆண்டு மதராஸ் பஞ்சாயத்து சட்டம் மற்றும் மதராஸ் மாவட்ட வளர்ச்சி மன்ற சட்டம் 1960 முதல் கொண்டு வந்தது.கிராம ஊராட்சித் தலைவர் 1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிராம ஊராட்சி
இந்திய அரசியலமைப்பின் 73 வது திருத்தம் நாட்டின் கிராமப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னாட்சி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்த கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பை வழங்குகிறது மக்கள் பங்கேற்பு மூலம் நல்லாட்சியை அடைவதற்கும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசியலமைப்புத் திருத்தம் அதிகாரப் பரவலாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்பு முறையில் கிராம ஊராட்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஊராட்சியாக கருதப்படுகிறது. ஊராட்சிகளை காட்டிலும் அதிகமாக மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஊராட்சியாக கிராம ஊராட்சி இருப்பதால் இவை அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஊராட்சியாக கருதப்படுகிறது.இதனால் அதிக கடமைகளும் அதிகாரங்களும் பொறுப்புகளும் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சியின் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஊராட்சி மன்றதலைவர்கள் துணைத்தலைவர் ஆகியோர்களை உள்ளடக்கியதே கிராம ஊராட்சி அமைப்பாகும்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப்படுகிறார்கள்
மக்கள் தொகை | உறுப்பினர்களின் (வார்டு) எண்ணிக்கை |
500 முதல் 2000 வரை மக்கள் தொகை உள்ள ஊராட்சிகள் | 6 |
2001 முதல் 6000 வரை மக்கள் தொகை உள்ள ஊராட்சிகள் | 9 |
6001 முதல் 10000 வரை மக்கள் தொகை உள்ள ஊராட்சிகள் | 12 |
10000 க்கு மேல் மக்கள் தொகை உள்ள ஊராட்சிகள் | 12 |
கிராம ஊராட்சியில் வசிக்கும் மக்களின் பொருளாதார மற்றும் சமூக நீதி தேவைகளை பூர்த்தி செய்ய, குடிநீர், தெரு விளக்குகள், சாலைகள், சுகாதார மேம்பாடு, குடும்ப நலன், மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, அடிமை முறை ஒழிப்பு, பாலங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், முழுமையான சுகாதாரம். தகனம், தங்குமிடம் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.